முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர்த்திறப்பு அதிகரிப்பால் லோயர்கேம்ப் நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி 159 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கியின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வலுத்து, தமிழகத்தின் நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டி உயர்ந்து வருகிறது. இதனால் அணை நீரை வைகை அணையில் இருப்பு வைக்கும் பொருட்டு, அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர்த்திறப்பு விநாடிக்கு, 1,400 கன அடியில் இருந்து 1,622 கன அடியாகி, தற்போது 1,766 கன அடியாக மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணை நீர் மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் குமுளி மலை அடிவாரம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில், தினசரி மின் உற்பத்தி 108 மெகவாட்டில் இருந்து 126 மெகாவாட்டாகி, தற்போது 159 மெகாவாட்டாக மேலும் அதிகரித்துள்ளது. மின் நிலையத்தின் நான்கு ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு தலா 39 மெகாவாட் வீதம் 159 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.