திருவாலங்காடு அருகே காதல் திருமணம் சம்பவத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் தொடர்புடையதாக கூறி புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியாரை கைது செய்ய நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவர் வீட்டின் அருகே குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. தகவல் அறிந்து அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜா என்பவரின் மகன் தனுஷ்(23) இவருக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா ஸ்ரீ (21) என்ற இளம் பெண்ணுடன் கடந்த மாதம் 15ம் தேதி காதல் திருமணம் செய்துக் கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் களாம்பாக்காத்தில் வீட்டில் இருந்த தனுஷ் தம்பி இந்திர சந்த்(16) என்ற சிறுவனை காரில் வந்த கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து தனுஷ் தாயார் காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் செய்தார். திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வனராஜா(55), மணிகண்டன்(49), கணேசன்(47) ஆகிய 3 பேரை 3 நாட்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் நேற்று சிறுவன் கடத்தல் சம்பவத்தில் திருவள்ளூர் எஸ். பி. தலைமையிலான தனிப்படை போலீசார் மகேஸ்வரி என்ற பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியார் இந்த சம்பவத்தில் தலையிட்டு பேசியதாகவும் இதனால் அவரை கைது செய்ய நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கட்சியின் தொண்டர்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது