மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு தற்போது அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) மதுரை பாண்டி கோவிலில் அமைந்துள்ள அம்மா திடலில் இந்த முருக பக்தர்கள் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. அறுபடை வீடுகளை போல அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டில் கலந்துகொள்ளும் வாகனங்களுக்கு பாஸ் கட்டாயம் என விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை, நீதிமன்ற உத்தரவின்படி ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், வாகனங்களுக்கு பதிவு சான்று, காப்பீடு, ஓட்டுநர் உரிமம் ஆகியவை காவல்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டிய நிபந்தனை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். இதன் பின்னணியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மாநாட்டில் கலந்து கொள்வார் என்ற செய்தி பரவியது.
ஆனால், இந்த தகவல் பொய்யானது என ரஜினிகாந்தின் பிஆர்ஓ ரியாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ரஜினிகாந்த் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லையென்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.