தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்வான ஆறு உறுப்பினர்கள், இன்று நாடாளுமன்றத்தில் முறைப்படி பதவியேற்றுக்கொண்டனர். திமுக சார்பில் மூத்த தலைவர் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் ஆகியோர் பதவியேற்றனர். அதிமுக சார்பில் முன்னாள் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் கிறிஸ்டோபர் மாணிக்கம் (எ) கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் புதிய உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், காலியான அந்த இடங்களுக்கு இவர்கள் கடந்த மாதம் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் திருச்சி சிவா மற்றும் தம்பிதுரை ஆகியோர் மீண்டும் அதே பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, புதிய உறுப்பினர்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தமிழகத்தின் உரிமைக் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிப்பதோடு, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியைப் பெறவும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும் இந்த ஆறு உறுப்பினர்களும் பாடுபடுவார்கள் என்று அந்தந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் எல்.கே.சுதீஷ் மற்றும் கிறிஸ்டோபர் மாணிக்கம் ஆகியோர் முதன்முறையாக மாநிலங்களவைக்குள் நுழைகின்றனர்.
