ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யும் பொருட்களை கடையின் முன்பு எடை போட்டு, விற்பனை முனைய கருவியில் பதிவு செய்ய உத்தரவிட கோரிய மனுவிற்கு பதிலளிக்கும்படி மத்திய – மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாட்டின் எந்த பகுதிகளில் இருந்தாலும் நியாய விலை கடைகளில் உணவு பொருட்களை வாங்க முடியும். இதற்காக அனைத்து நியாய விலை கடைகளிலும் மின்னணு விற்பனை முனைய கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை மேம்படுத்தும் வகையில் உணவு பொருள் வினியோகத்தில் உள்ள குறைபாடுகளை களையவும், சரியான எடையில் பொருட்களை வழங்க மின்னணு விற்பனை கருவியுடன், மின்னணு எடை தராசை இணைக்க வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி, நியாய விலை கடைகளில் உள்ள மின்னணு விற்பனை கருவியுடன் மின்னணு எடை தராசுகளை இணைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் கொண்டு வரும் போது, எடை குறைவாக இருப்பதால், கடை முன் அவற்றை எடை போட்டு வழங்க, அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், இந்த புதிய நடைமுறை படி பொருட்கள் முதலில் அளவீடு செய்த பிறகு பில் போடப்பட வேண்டும். இதனால் ஒரு நாளைக்கு 20 ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. பொருட்கள் எடை குறைவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அமலப்படுத்தப்பட்ட போதிலும், ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொண்டு வரும் போதே ஒரு சாக்குக்கு ஒன்று முதல் ஒன்றரை கிலோ எடை குறைவாகவே உள்ளது.

எந்த ஒரு தவறும் செய்யாமல் ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் ஒரு குறிப்பிடதக்க பகுதியை இழந்து வருகிறார்கள். அதனால் கடைகளுக்கு கொண்டு வரப்படும் உணவு பொருட்களை கடைகளில் வைத்து எடை பார்த்து அதனை விற்பனை முனைய கருவியில் பதிவு செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுவிற்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version