5 மாவட்டங்களுக்கு இன்று (டிச.2) ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் தேதி வங்கக்கடலில் உருவான ‘டிட்வா புயல்’ காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இலங்கையில் தனது கோர தாண்டவத்தை காண்பித்த டிட்வா புயல், புதுச்சேரி – வட தமிழகம் – தெற்கு ஆந்திரா கடற்கரையோர பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கத் தொடங்கியது.
தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை அருகே நகராமல் மையம் கொண்டுள்ளது. இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒருசில இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்று கொட்டித் தீர்த்த மழையின் தாக்கம் இன்று குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வரும் நிலையில், தரைக்காற்றின் வேகம் இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கிறது. இதனால், சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கம் மற்றும் எண்ணூர் பகுதியில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா, மேற்கு மத்திய வங்காள விரிகுடா, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளில் மையம் கொண்டுள்ள புயல், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 40 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கில் 130 கி.மீ தொலைவிலும், கடலூருக்கு வடக்கு-வடகிழக்கில் 150 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே 180 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
அதேபோல, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதி வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. இது வட தமிழகம் – புதுச்சேரி கடற்கரைகளை நோக்கி மெதுவாக நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பிறகு, கடற்கரையை நோக்கி நகரும்போது, அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக பலவீனமடைய வாய்ப்புள்ளது.
