”திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்” என்ற வசனத்தை நாம் அனைவரும் கேட்டிருப்போம். அந்த ஆயிரங்காலத்துப் பயிரை, பலர் அவசரகால செயல்களைச் செய்து கருக வைக்கும் அவலங்களும் இதே தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. 21-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வந்துவிட்ட பிறகும், எத்தனையோ அறிவியல், உலக வளர்ச்சிகளைக் கண்டுவிட்ட பின்பும், சாதிய ஏற்றத்தாழ்வுகள் நம் பூமியை விட்டு மறைந்தபாடில்லை. அன்றாட வாழ்வில் அதன் தாக்கம் எவ்வளவுக்கு எவ்வளவு குறைந்திருக்கிறதோ, திருமணம் என்று வரும்போது அதன் பார்வை அவ்வளவுக்கு அவ்வளவு பெருகிக் கிடக்கிறது. “இந்தக் காலத்தில் யாரு ஜாதி பார்க்குறா?” என்று கேள்வி கேட்பவர்கள் கூட, அதன் பிடிமானத்திலிருந்து விலக அஞ்சும் அளவு நெருக்கடியான கட்டமைப்பை சாதிகள் உருவாக்கி வைத்திருக்கின்றன. அதுவே இளைஞர்கள் பலரது வாழ்வையும் வருங்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கி வருகிறது.
அண்மையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைக்காட்டிபுதூரில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த ரிதன்யாவின் கதையிலுள்ள சோகமும் இதன் விளைவுதான். கடந்த ஏப்ரல் மாதம் ரிதன்யாவுக்கு கவின்குமார் என்ற இளைஞருடன் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக சென்ற நிலையில், திடீரென்று ரிதன்யா தம் பெற்றோர் வீட்டுக்கு வந்திருக்கிறார். அங்கே வாழப் பிடிக்கவில்லை என்று கூறிய அவர் பெற்றோர் வீட்டிலேயே தங்கி விட்டார். இரண்டு வாரம் மட்டுமே கணவருடன் இருந்துள்ளார். பின்னர் கோயிலுக்கு காரில் சென்றவர் வழியிலேயே மயங்கி, உயிரிழந்தார். விசாரணையில் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு என்றுதான் பெற்றோர் நினைத்திருக்கின்றனர். ஆனால் தமது முடிவுக்கு என்ன காரணம் என்பதை தம் தந்தை அண்ணாதுரைக்கு குரல் வழிப் பதிவாக அனுப்பியிருக்கிறார் ரிதன்யா. அதில், வரதட்சணையாகப் போட்ட நகையை கேட்டும், பணம் கேட்டும் ரிதன்யாவைக் கொடுமைப் படுத்தியதாகக் கூறியுள்ளார். உடல் ரீதியாகவும் அவரைத் துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். இதைத் தாங்க முடியாமல்தான் ரிதன்யா உயிரிழந்ததாக உறுதி ஆனது. இதையடுத்து, அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் மாமனாரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்களின் வருங்காலத்தை இத்தகைய இருட்டில் தள்ளும் வரதட்சணை கொடுமை, தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் தொற்றுநோய் ஆகும். அதற்கு இளம் பெண் ஒருவர் பலியாகியிருக்கும் நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அதைவிடக் கொடுமையாக விஷயம், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரையின் கருத்து தெரிவித்தார். அதுதான் ரிதன்யாவின் இந்த முடிவுக்கு அவரது பெற்றோரின் அவசரப் போக்கே காரணமோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ரிதன்யாவின் தற்கொலை குறித்து செய்தியாளர்களிடம் அவரது தந்தை அண்ணாதுரை பேசினார். அப்போது “ரிதன்யாவின் திருமணத்திற்கு 300 சவரன் நகை போட்டோம். அதில் 120 சவரனை மட்டுமே அவளிடம் கொடுத்தோம். மீதி எங்களிடம் இருந்தது. அதைக் கேட்டு அவளது கணவர் வீட்டில் துன்புறுத்தியிருக்கிறார்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அந்தத் துன்புறுத்தல்களை என் மகள் அனுபவித்தாள். பின்னர் அது தாங்க முடியாமல்தான் எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டாள். பின்னர் நாங்கள் பேசி சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தோம். எல்லாம் சரியாகவிடும் என்று தைரியம் சொன்னோம். ஆனால் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துவிட்டாள்” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
அதன் பின்னர்தான், “திருமண வாழ்க்கை பிடிக்காமல் பலர் மறுமணத்திற்கு தயாராகிறார்கள். ஆனால் என் மகள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் தற்கொலை செய்து கொண்டாள். அவள் எங்களை விட்டுப் போய்விட்டாலும் நான் பெருமை கொள்கிறேன்” என்று சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைக் கூறினார். அண்ணாதுரையின் இந்தப் பிற்போக்குத் தனமான கருத்துக்குக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அதுவே முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறது.
இன்று தமிழ்நாட்டில் திருமணங்கள் நடக்கும் எண்ணிக்கைக்கு நிகராக விவாகரத்துகளும் நடக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் 6,000-க்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் பதிவாகியிருப்பதாக புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. மேலும் 40 குடும்ப நல நீதிமன்றங்களில் 33,213 வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். அவற்றில் 25% மேல் வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை காரணமாகவே அமைவதாக அதிர்ச்சிகரத் தகவலும் தெரியவருகிறது. இந்த நிலையில், பிற்போக்குத்தனமான பேச்சுகளும் நடத்தைகளும் சாதி, மத, அந்தஸ்து கௌரவங்களுக்காக இளைஞர்களின் வாழ்க்கையைப் பெற்றோர் பணயம் வைக்கிறார்களா என்ற கேள்வியை உருவாக்குகிறது.
அறிவாலும் திறமையாலும் பண்பட்ட சமூகமாய் மாறிக் கொண்டு வருவதாக நினைக்கும் இந்த நவ யுகத்தில், வீடுகளில் சாதிக் கட்டமைப்பு ஏற்படுத்தியிருக்கும் ஏற்றத் தாழ்வுகளை உடைத்தால்தான் சமுதாயத்திலும் உடைக்க முடியும் என்பது சமூக செயற்பாட்டாளர்களின் வாதமாக உள்ளது.