M.P.கனிமொழிக்கு போட்டியாக கருத்துக்கேட்பில் சபரீசன் ஈடுபட்டிருப்பது திமுகவுக்குள் புயலை கிளப்பியுள்ளது. இதன் விவரம் என்ன என்பதை பார்க்கலாம்.
திமுகவுக்குள் பல்வேறு மட்டங்களில் நடக்கும் பனிப்போர்கள் நாளாக நாளாக வெளியில் அம்பலப்படுகிறது. அதிலும் குறிப்பாக திமுக முதன்மை குடும்பத்துக்குள் நடப்பது தற்போதைய சூழலில் உற்று கவனிக்கப்படுகிறது. அந்த வகையில் கனிமொழி எம்.பி.யின் பொறுப்புக்குட்பட்ட பகுதியில் சபரீசன் போட்டியாக பணியாற்றி வருவது தென் மாவட்ட திமுகவில் மட்டுமல்லாது குடும்பத்திற்குள்ளும் நெருடல்களை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
திமுகவின் மண்டல தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி எம்.பி., சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவரது பொறுப்பிற்கு உட்பட்ட தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தேர்தல் பணிகள் தொடர்பாக அவர் பரபரப்பாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முதல்வரின் மருமகன் சபரீசன் திடீரென கடந்த இரு நாட்களுக்கு முன் தூத்துக்குடிக்கு வந்து தங்கியுள்ளார். அங்கு கட்சியின் பல்வேறு நிர்வாகிகளை அவர் தனித்தனியே சந்தித்துப் பேசி உள்ளார். “ஒரு மண்டலத்திற்கு இரண்டு பொறுப்பாளர்களா?” என கட்சி நிர்வாகிகள் மத்தியில் இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக உடன்பிறப்புகள் புலம்புகின்றன.
இது தொடர்பாக கருத்துக்கள் பகிர்ந்த தூத்துக்குடி, நெல்லை மண்டலா நிர்வாகிகள் சிலர், “சட்டமன்ற தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் பொருட்டு திமுகவின் துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி அவர்களுக்கு தென் மாவட்டங்களில் 22 தொகுதிகளை உள்ளடக்கிய மண்டலத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடி முகவர் சந்திப்பு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார். அதுபோக, மண்டலத்தை சேர்ந்த சபாநாயகர் அப்பாவுவுக்கும் மாவட்டச் செயலர் கிரஹாம்பெல்லுக்கும் இடையே நிலவிய மோதல் உள்பட கட்சியினருக்கு இடையே நிலவும் மோதல் போக்குகளை சரி செய்து வருகிறார். இவ்வாறு தனது பணிகளை கனிமொழி அவர்கள் செய்து வர, திடீரென தூத்துக்குடிக்கு வந்துள்ள முதல்வரின் மருமகன் சபரீசன், தனிப்பட்ட முறையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். குறிப்பாக அவர்களிடம், தேர்தல் நிலவரம் மற்றும் மக்கள் மத்தியில் கட்சி மற்றும் ஆட்சி மீதான செல்வாக்கு குறித்தெல்லாம் கேட்டிருக்கிறார்.
தேர்தல் நேரத்தில் இது சாதாரண விஷயம் தான்; தவறில்லை தான் என்றாலும் கூட, ஏற்கனவே இதே மாதிரியான கருத்துக்களை நிர்வாகிகளிடம் கனிமொழி கேட்டு பெற்று தொடர்ச்சியாக கட்சிக்கான தேர்தல் பணிகளை செய்து வரும் நிலையில், அவருக்கு போட்டியாக செயல்படுவது போல அதே கட்சியில் உள்ள இன்னொருவர் வந்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்டறிவது என்பது திமுகவினருக்கு ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.
திமுகவின் டெல்லி முகமாக கனிமொழி இருக்கும்போது சமீபத்தில் சில சந்திப்புகளை சபரீசன் மேற்கொண்டதன் புள்ளியிலிருந்து பார்க்கும்போது தான், இது எதார்த்தமான நிகழ்வு தானா? அல்லது வேறு ஏதேனும் பனிப்போர் உள்ளுக்குள் நடந்து வருகிறதா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த கேள்விகளுக்கான பதில் விரைவில் தெரிந்து விடும் என்கிறார்கள் திமுகவை உற்றுநோக்கும் சிலர்.
