சென்னை ரிப்பன் மாளிகை வெளியே கிட்டத்தட்ட 13-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டட்னர்.
சென்னை பெருநகர மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், தனியார் நிறுவனத்தின் வாயிலாக கடந்த 16.07.2025 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ம் தேதி முதல் ரிப்பன் கட்டடம் முன்பு காத்திருப்பு போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் பாராமல் அவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு அதிமுக, தவெக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதேப் போல திரைப்பட நடிகர், நடிகைகளும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 13-வது நாளாக பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. அமைச்சர்கள், மாநகராட்சி மேயர் உட்பட பலரும் 8கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.
பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு மாநகராட்சி அறிவுறுத்தியும் கூட, பணியாளர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. நீதிமன்றமும் அத்துமீறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அகற்ற உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 13-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
சுமார் 800 முதல் 900 பேர் வரை கைது செய்யப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டு, வேறு, வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது சில பெண் பணியாளர்கள் மயக்கமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தேசிய கொடி, கம்யூனிஸ்டு கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதனால் போராட்டம் நடந்த இடத்தில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.