பணி நிரந்தரம் மற்றும் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களைக் கைது செய்ய முயன்றபோது, காவல் துறை வாகனச் சக்கரத்தில் தலையை வைத்தும், சாலையில் படுத்து உருண்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சியில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், துப்புரவுப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கக் கூடாது என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஏற்கனவே ரிப்பன் மாளிகை முன்பு 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்காத நிலையில், இன்று காலை நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் நோக்கி வந்தனர்.

அறிவாலயத்தின் முன்புறம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அறிவாலயத்தின் பின்புறம் உள்ள ஸ்கீம் சாலை வழியாகத் திடீரென நுழைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அறிவாலயத்தின் பிரதான இரண்டு இரும்புக் கதவுகளை இழுத்து மூடினர்.

போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றபோது, பணியாளர்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏராளமான பெண்கள் அண்ணா சாலையின் நடுவே அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் நிலைமை மோசமடைய, தூய்மைப் பணியாளர் ஒருவர், கைது செய்ய வந்த போலீஸ் வாகனத்தின் முன் சக்கரத்தில் தனது தலையை வைத்து ஆவேசமாகப் போராட்டத்தில் ஈடுபட்டார். இது அங்கிருந்தவர்களைப் பதற வைத்தது.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றிக் கைது செய்தனர். இன்று காலை முதலே அண்ணா சாலையில் தூய்மைப் பணியாளர்கள் குவியத் தொடங்கியதாலும், திடீர் சாலை மறியலாலும் தேனாம்பேட்டை, நந்தனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட பணியாளர் ஒருவர் கண்ணீர் மல்கக் கூறியதாவது, இந்த வேலையை நம்பி தான் எங்களுடைய வாழ்க்கையே இருக்கிறது. இந்த வேலையும் எங்களுக்கு இல்லை என்றால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுவோம். கடந்த ஐந்து மாதங்களாகப் போராடியும் யாரும் எங்கள் மீது துளியும் அக்கறை காட்டவில்லை,” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா அறிவாலயம் மற்றும் தேனாம்பேட்டை பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version