நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சங்கராபுரம் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 5 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டுவைச் சேர்ந்த சக்தி என்பவருக்கு எதிராக கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, சக்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் விரைவாக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென 2024 மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, அந்த உத்தரவுப்படி இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது குறித்து ஜூன் 4 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, விசாரணை அதிகாரியான சங்கராபுரம் ஆய்வாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஜூன் 3ம் தேதி மின்னணு முறையில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நாளில், நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக அவசர அவசரமாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், முழுமையாக விசாரணை நடந்ததா?என சந்தேகிப்பதாகவும் நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.
மேலும், 2024ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி ஏன் செயல்படவில்லை என்ற விளக்கமும் அளிக்காததால், சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதி, உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டார்.