நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 24 முதல் 29-ம் தேதி வரை பெய்த கனமழையைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் பலத்த மழை பதிவாகி வருகிறது. தொடர் கனமழை மற்றும் மண் சரிவுகளின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுகா பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் லேசான மழை பதிவாகி வந்தாலும், குந்தா தாலுகாவுக்குட்பட்ட நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
தொடர் மழை காரணமாக, நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்துள்ளார். இது மாணவர்களின் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
இதேபோல், அண்டை மாவட்டமான கோயம்புத்தூர் மாவட்டத்திலும் மழைப்பொழிவு தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக, வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: “விஜய் ஒரு நல்ல நடிகர்…” பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.