‘டித்வா’ புயல் காரணமாக திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மதியம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டித்வா’ புயலாக வலுப்பெற்று, சென்னைக்கு 540 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 440 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் தற்போது நிலைகொண்டு இருக்கிறது.
இது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. ‘டித்வா’ புயல் வருகிற 30-ம் தேதி அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களில் விடுமுறை: இதன் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்வதால் மாணவர்களின் நலன் கருதி திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்றைக்கு அரை நாள் (மதியம்) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
4 மாவட்டங்களுக்கும் ‘ரெட் அலர்ட்’: இந்தப் புயல் காரணமாக தென் தமிழகத்தில் இன்று (நவ.28) பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், நாளை (நவ.29) வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 30-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
