சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், வருகிற 24 ஆம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றை வாக்குறுதியை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை எழும்பூர் லாங்ஸ் தோட்ட சாலையில் இருந்து ராஜரத்தினம் மைதானம் வரை பேரணியாக சென்றனர்.
இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “2009 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதிக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, தூய்மை பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை நிர்ணயம் செய்தார்கள். அப்போது கருணாநிதி, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் ஊதிய முரண்பாடு கலைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதே வாக்குறுதியை அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 4 வருடங்களை கடந்த நிலையில், தற்போது வரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஜனவரி 1, 2023 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனையை களைவதற்கு குழு அமைத்தனர். தற்பொழுது அந்த குழுவும் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.
இவர்களுக்கு தரமான ஆசிரியர்கள் வேண்டும். ஆனால், தகுதியான ஆசிரியர்களுக்கு தேவையான ஊதியத்தை வழங்க முடியாது. பொருளாதாரம் மற்றும் கல்வியில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாடு ஊதியம் வழங்குவதில் கடைசி இடத்தில் உள்ளது. பிற மாநிலங்களில் வழங்குவது விட குறைந்த ஊதியத்தை எங்களுக்கு வழங்குகின்றனர். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற எங்களின் ஊதிய முரண்பாடு தீர்க்காவிட்டால், வருகிற 24 ம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம், உண்ணாவிரதம், மறியலில் ஈடுபட உள்ளோம். எங்கள் வாழ்வாதாரம் மேம்படும் வரை போராட்டம் தொடரும். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாக கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.
எத்தனை அடக்குமுறை வந்தாலும், வீட்டுக்காவலில் வைத்தாலும் போராட்டம் தொடரும். அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தீர்வு காண வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
