தமிழக தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகிக்கொண்டு செல்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவருக்கொருவர் உண்மைகளை உடைத்து பேசி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் அதிமுகவில் படு பயங்கர பிரச்சார பேச்சுக்கள் அனல் பறக்கின்றன. அந்தவகையில் அதிமுகவில் இருந்து பிரிந்து தவெகவில் இணைந்த செங்கோட்டையன், நேற்று அந்தியூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஜெயலலிதா மறைவிற்கு பின் நடந்தவை, கூவத்தூரில் நடந்தவை, சசிகலாவின் செயல்பாடு, எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது உள்ளிட்ட ரகசியங்களை பகிர்ந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்தான் முதலமைச்சர் ஆகி இருக்க வேண்டும். ராத்திரி வரைக்கும் நான்தான் அந்தப் பட்டியலில் இருந்தேன். ஆனால் காலையில் எல்லாம் மாறிப்போச்சு. காரணம், எடப்பாடி கையில் பணப்பெட்டி இருந்தது, என் கையில் பெட்டி இல்லை.

சசிகலா சிறைக்குச் செல்ல நேரிட்டபோது, அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் நான்தான் என்று அவரே உறுதி அளித்தார். ஆனால், திடீரென ஒரு மலைப்பாம்பைப் போல எடப்பாடி பழனிசாமி தரையில் நீந்தி வந்து விழுந்து, கெஞ்சிப் பதவியைப் பெற்றார். அன்று கட்சியைக் காக்க வேண்டும் என்பதற்காகவே நான் மௌனமாக இருந்தேன். ஆனால், இன்று எவ்வித நன்றியுணர்வும் இல்லாமல் என்னை யார் முதலமைச்சர் ஆக்குவது என அவர் பேசுவது விந்தையாக இருக்கிறது” எனத் தனது நீண்ட நாள் ஆதங்கத்தை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தினார்.

மேலும், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளை அவர் கையாண்ட விதம் குறித்தும் செங்கோட்டையன் அடுக்கடுக்கான புகார்களை வாசித்தார். பவானிசாகர் மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் மட்டும் சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான தொழிற்சாலைத் திட்டங்களில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், மொத்தமாக ரூ.50 லட்சம் கோடி வரை அவர் சம்பாதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். டிடிவி தினகரன், ஓபிஎஸ், பிரேமலதா விஜயகாந்த் தொடங்கித் தன்னைத் தூக்கிவிட்ட பாஜக மற்றும் அண்ணாமலை வரை அனைவரையும் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தித் தனிமைப்படுத்தி விட்டார் என்று அவர் சாடியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இந்தநிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செங்கோட்டையன் குறித்தும் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கோபியில் பரப்பரை மேற்கொண்ட அவர், சட்டமன்றத்தில் ஒரு வார்த்தை கூட திமுகவை எதிர்த்து அவர் பேசியது கிடையாது என்றும், செங்கோட்டையன் திமுகவின் உளவாளி என்பதை அப்போதே கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தார்.

அமைச்சர் பதவிக்காக கண்ணீர் வடித்தவர் செங்கோட்டையன்..ஒரு காலத்தில் எனக்கு மிகவும் நண்பராக இருந்தவர் செங்கோட்டையன். ” நீ எனக்கு பதவி கொடுக்கவில்லை என்றால் யார் கொடுப்பது? “என கண்ணீர் வடித்தவர் அவர். செங்கோட்டையன் பொறாமை பிடித்தவர்; யாரையும் அவர் வளர விடமாட்டார் என்றும், மேலும், வீட்டுக்கு வரும் பணக்காரர்களுக்கு ஒரு Tea, ஏழைகளுக்கு வேறுமாதிரி Tea கொடுப்பவர் தான் செங்கோட்டையன், மக்களை உதாசீனப்படுத்தும் செங்கோட்டையனுக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது எனறும் அவர் கேட்டுக்கொண்டார்.

மு.க ஸ்டாலினை அடிக்கடி சந்தித்து பேசிக் கொண்டிருந்தவர் செங்கோட்டையன். 100 நாள் சிறையில் இருந்து விட்டு வந்த அவர் ரோட்டில் நடக்க முடியாத அளவிற்கு ஆதாரம் உள்ளன. அதிமுகவை உடைக்க திமுகவுடன் சேர்ந்து துணை போனவர் 30 ஏக்கரில் கல்லூரி கட்டியது எப்படி?

வயதுக்கு தகுந்தாற்போல் செங்கோட்டையன் பேச வேண்டும் . அதிகாரிகள் ரெய்டு வந்த போது பணத்தை ஆற்றில் விட்டவர். பணம் மிஞ்சி இருந்தாலும் கட்சிக்காரர்களுக்கு கொடுக்காதவர் தான் செங்கோட்டையன்.

ஆதாரங்களை வெளியிட்டால் செங்கோட்டையன் வெளியில் நடமாட முடியாது. ஆதாரங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடியும் எனவும் எச்சரிக்கை தரும் விதமாக பேசிய இபிஎஸ்-ன் அதிரடி பேச்சு மக்களிடையே அதிர்ச்சி தந்துள்ளது

மேலும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெல்வேன் என்றும் அதிமுக செயல்படுத்திய அத்திக்கடவு அவிநாசி குடிநீர் திட்டத்திற்கு பெயர் வைத்தது திமுக என்றும் குறிப்பிட்டு வாக்குகளை சேகரித்தார் இபிஎஸ். தேர்தல் நெருங்கும் வேளையில் முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் இப்படி மாறி மாறி உண்மைகளை போட்டுடைப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது,

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version