தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மு.க.ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி – சீமான் ஆகியோருடன் முதலமைச்சர் நாற்காலிக்கு தவெக தலைவர் விஜய்யும் களமிறங்கியுள்ளார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு முடங்கிய தவெக-விற்கும், விஜய்க்கும் அதிமுக-வின் முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கட்சியில் இணைந்தது அவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்தது. செங்கோட்டையன் வருகைக்கு பிறகு பல்வேறு முக்கிய ஆலோசனைகளும் அவருடன் கலந்தாலோசித்தே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், செங்கோட்டையன் மூலமாக பல்வேறு கட்சியின் முக்கிய புள்ளிகளை தவெக பக்கம் இழுக்க விஜய் முடிவு செய்துள்ளார். அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளை தவெக பக்கம் இழுக்க காய்களை நகர்த்தி வருகின்றனர்.
இந்தநிலையில், எடப்பாடி மீது அதிமுகவில் முக்கிய புள்ளிகளும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. அதிமுகவில் எதிர்பார்த்த சில முக்கிய புள்ளிகள் விருப்பமனு அளிக்கவில்லை என்ற தகவல் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகவும் கூட்டணி வலிமை பெறட்டும் அதன் பிறகு பார்க்கலாம் என்ற நினைப்பில் உள்ளார்களாம் என்றும் கூறப்படுகிறது. இதனை பயன்படுத்திக்கொண்டு அந்த புள்ளிகளை தவெகவில் இணைக்க செங்கோட்டையன் காய் நகர்த்தி வருவதாகவும் அதிமுக தலைமைக்கு தகவல் சென்றுள்ளதாம். இதனால், இந்த புள்ளிகளை கண்காணிக்க மூத்த தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
