தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், தனது கட்சியில் முக்கிய அரசியல் பிரமுகர்களை இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், அதிமுக-வின் முக்கிய முகமாக அறியப்பட்ட ஜே.சி.டி. பிரபாகரை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.
தற்போது ஓ.பி.எஸ். அணியில் உள்ள ஜே.சி.டி. பிரபாகர், அண்மையில் தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், த.வெ.க. தலைவர் விஜய் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். மேலும், ‘நீங்கள் த.வெ.க.வில் இணைகிறீர்களா?’ என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் நேரடியாக மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
த.வெ.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன், ஜே.சி.டி. பிரபாகரை தங்கள் கட்சியில் இணைப்பது குறித்து மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. தென் சென்னை அரசியலில் வலுவான ஆதரவு தளத்தை கொண்டுள்ள ஜே.சி.டி.பிரபாகரை தவெக-வில் இணைந்தால், அது ஓ.பி.எஸ். அணிக்கும், அதிமுக கூட்டணி கட்சிக்கும் ஒரு பின்னடைவாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். எனவே, இந்த இணைப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் ஈரோட்டில் நடைபெறவிருக்கும் பிரச்சார கூட்டத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
