தமிழக சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாகனத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் மறித்துச் சோதனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பரப்புரைக்காகத் தஞ்சாவூரில் இருந்து திருவாரூருக்கு முதலமைச்சர் சாலை மார்க்கமாகச் சென்றபோது, சாலியமங்கலம் பகுதியில் நிலை கண்காணிப்புக் குழுவினர் அவரது காரை நிறுத்தி அதிரடியாகச் சோதனையிட்டனர். காரின் உட்பகுதி மற்றும் உடைமைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, முதலமைச்சர் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் சிக்காததால், சிறிது நேரத்திற்குப் பிறகு வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பாரபட்சமின்றி அனைத்து அரசியல் தலைவர்களின் வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் வாகனங்களிலும் பறக்கும் படையினர் இதே போன்ற சோதனைகளை நடத்தியுள்ளனர். “சட்டம் அனைவருக்கும் சமம்” என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
