தமிழ்நாடு மட்டுமல்லாமல், தேசியளவில் உற்று நோக்கும் தொகுதியாக கோவை இருக்கிறது. அந்தவகையில், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து போட்டிக்கு தயாராகி வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள கோவையில் வேட்பாளர்கள் தேர்வில் செந்தில் பாலாஜி களமிறங்குவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன. தற்போதே அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டன. ஒருபுறம் கூட்டணி, மறுபுறம் களப் பணி என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த 2021 தேர்தலில் திமுகவிற்கு பெரிதும் பின்னடைவாக அமைந்தது கொங்கு மண்டலம். அதிலும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. இது திமுகவிற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதேசமயம் அடுத்தடுத்த தேர்தல்களில் திமுக எழுச்சி கண்டது. இதில் செந்தில் பாலாஜியின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் தற்போது கரூர் மாவட்டத்திற்கு பதிலாக கோவையில் போட்டியிட செந்தில் பாலாஜி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கோட்டையாக இருந்தாலும், கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் வேட்பாளர்களை தற்போதே டிக் அடித்து வைக்க வேண்டும் என்று திமுக தலைமை காய் நகர்த்தி வருகிறது.
