கோவை, கிணத்துக்கடவு அரசு மேல் நிலைப் பள்ளியில் பணி புரியும் இரண்டு ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியும் போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் இரண்டு ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, குறித்த பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர், பள்ளி நிர்வாக காரணங்களையும் கருத்தில் கொண்டு கிணத்துக்கடவு அரசு மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றிய பலர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
அதன்படி, விவசாயப் பிரிவு ஆசிரியர் செல்வராஜ் வேட்டைக்காரன்புதூர் அரசு மேல் நிலைப் பள்ளிக்கும், இசை ஆசிரியர் செல்வராஜ் தொண்டாமுத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளிக்கும், தாவரவியல் ஆசிரியர் பாலசுப்பிரமணியம் பொள்ளாச்சி நகரவை ஆண்கள் அரசு மேல் நிலைப் பள்ளிக்கும், வேதியியல் ஆசிரியர் சுஜாதா ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல் நிலைப் பள்ளிக்கும், வரலாறு ஆசிரியர் கலைச் செல்வன் குளத்துப் பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளிக்கும் பணிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.