தங்கம் விலை கடந்த மாதம் அக்டோபர் 17-ஆம் தேதி புதிய உச்சத்தைத் தொட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், அதனைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், வாரத் தொடக்கமான இன்று தங்கம் விலை உயர்ந்து, சவரன் ரூ.91 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகிறது.

கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி ஒரு சவரனுக்கு ரூ.3,680 குறைந்தும், அதன் தொடர்ச்சியாக 28-ஆம் தேதி சவரனுக்கு ரூ.2,200 குறைந்தும் ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது.

இதற்குப் பிறகு, கடந்த 6-ஆம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை இரு முறை உயர்வைச் சந்தித்தது. காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்தது. பிற்பகலிலும் இதேபோல் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,320-க்கும், ஒரு சவரன் ரூ.90,560-க்கும் விற்பனை ஆனது.

இதனைத் தொடர்ந்து, 7-ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,270-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.90,160-க்கும் விற்பனையானது. பின்னர், 8-ஆம் தேதி கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வாரத் தொடக்கத்தில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,410-க்கு விற்பனையாகிறது. தங்கம் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி (கட்டி வெள்ளி) ஒரு கிலோ ரூ.1,67,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version