பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால், சில்லறை விற்பனையாளர்கள் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் தலைவர் க.ப.முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கடந்த நான்கு ஆண்டுகளாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் பொதுமக்களின் நலன் கருதி நிலைப்புத்தன்மையைப் பேணி வந்தன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய வளைகுடா போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது உலகளாவிய எரிசக்தி சூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வை அடுத்து உலகின் பல நாடுகள் தங்கள் சில்லறை விற்பனை விலையை உடனடியாக உயர்த்தின. இருப்பினும், இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக விலையை உயர்த்தாமல், அந்தப் பெரும் சுமையைத் தாங்களாகவே ஏற்றுக் கொண்டன.
தற்போதைய சூழலில், கச்சா எண்ணெய் வாங்கும் விலைக்கும் விற்பனை செய்யும் விலைக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இப்போது செய்யப்பட்டுள்ள விலை உயர்வு என்பது எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை 100% ஈடுசெய்யக் கூடியது அல்ல. மக்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
விலை உயர்வு ஒருபுறம் இருக்க, பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனையாளர்கள் தற்போது இரண்டு முக்கியமான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
மூலதன அதிகரிப்பு எரிபொருளின் விலை உயரும்போது, தினசரி விற்பனையைத் தொடர டீலர்கள் கூடுதல் முதலீடு (Working Capital) செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். இது டீலர்களின் நிதி நிலையைப் பெரிதும் பாதிக்கிறது.
கடந்த மூன்று வாரங்களாக, டீலர்கள் கேட்கும் அளவுக்கு (Indent) பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் செய்யப்படுவதில்லை. இந்தத் தட்டுப்பாட்டினால் தினசரி விற்பனையைத் தடையின்றி நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே எண்ணெய் நிறுவனங்கள் தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்கவும், டீலர்களின் மூலதனச் சுமையைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தையும், எண்ணெய் நிறுவனங்களையும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
