மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலைவழக்கில், நிலைமையை சரியாக கையாளாத காரணத்தால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்தனர். பின்னர் மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார் அடித்து துன்புறுத்தியதில் அஜித் குமார் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதில் சம்பந்தபட்ட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 நாள் நீதிமன்ற காவலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் காவலாளி பலியான சம்பவத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், இந்த மாவட்டத்திற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
