தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் தாக்கல் செய்த பொது நல மனு:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் அருகே சிவகளையில், தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதியில் தனிநபர் ஒருவருக்கு கல்குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்த குவாரியில் பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதால், அகழாய்வு பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட கல் குவாரிக்கு வழங்கப் பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு முன் வியாழக் கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், சிவகளை அகழாய்வு பகுதியில் கல்குவாரிக்கு வழங்கப் பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கல் குவாரியின்
உரிமையாளர் தனக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கருதினால் அதிகாரிகளிடம் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யலாம். இதில் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை, சிவகளை அகழாய்வு பகுதியில் வேறு எந்த கல்குவாரியும் செயல்பட கூடாது. இதற்கான காலக்கெடு ஏதும் விதிக்க இயலாது. சிவகளை அகழாய்வு பகுதியை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனர்.