தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் சமூகநீதி அடிப்படையில் பின்பற்றப்பட்டு வந்த தரவரிசைப் பட்டியலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அதன் எதிர்கால விளைவுகள் குறித்து ஆய்வு செய்யவும், சட்டரீதியான தீர்வுகளை அளிக்கவும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஜி.எம். அக்பர் தலைமையில் குழு அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
குழுவின் செயல்பாடு மற்றும் காலக்கெடு
இந்தக் குழு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழுவின் பணிகளுக்கு உதவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பதவி உயர்வில் சமூகநீதியை உறுதி செய்வதற்கான சட்டரீதியான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை இந்தக் குழு ஆராய்ந்து, மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகள், அரசுப் பணியாளர் தேர்வு மற்றும் பதவி உயர்வு முறைகளில் சமூகநீதியை நிலைநிறுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.