சென்னையில் காதல் தகராறில் நண்பருக்கு உதவிய கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவை சேர்ந்தவர் நிதின்சாய். 21வயதான இவர் சென்னையில் உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்துள்ளார். கடந்த 28-ம் தேதி இரவு திருமங்கலத்தில் தனது நண்பர் மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
தொடர்ந்து தனது கல்லூரி நண்பர் அபிஷேக்குடன் இருசக்கர வாகனத்தில் நிதின்சாய் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திருமங்கலம் பள்ளி சாலை அருகே வந்த போது, இருசக்கர வாகனத்தின் மீது அதி வேகத்தில் வந்த சொகுசு கார் பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நிதின்சாய், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அபிஷேக் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் நிதின்சாய் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த அபிஷேக் சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் இது திட்டமிடப்பட்ட கொலை என்பது தெரியவந்தது.
கொலையான நிதின்சாயின் நெருங்கிய நண்பரான வெங்கடேஷ், பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். மாணவி வெங்கடேஷின் காதலை மறுத்ததோடு, தனது நண்பர், பிரணவ் இது குறித்து கூறியிருக்கிறார். பிரணவ் வெங்கடேஷை மிரட்ட, அதனை அவர் பெரிதாக பொருட்படுத்தாமல் மீண்டும் மாணவியை காதலிக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார்.
சம்பவத்தன்று மோகன் என்பவரது பிறந்தநாளில் வெங்கடேஷ், நிதின்சாய், அபிஷேக் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு வந்த பிரணவ், வெங்கடேஷின் காலில் காரை ஏற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷின் நண்பர் நிதின்சாய், அபிஷேக் ஆகியோர் பிரண்வின் சொகுசு காரை சேதப்படுத்தியுள்ளனர். இதற்கு பழிவாங்க, பிரணவ், நிதின்சாய் சென்ற இருசக்கர வாகனத்தை மோதி அவரை கொலை செய்துள்ளார்.
விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பதிவு செய்த போலீசார், அதனடிப்படையில் பிரணவ், சுதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அத்தோடு, தலைமறைவாக இருந்த திமுக பிரமுகரின் பேரனான சந்துருவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை இந்த கொலை வழக்கில் மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.