சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை அமர்வுக்கு இன்று முதல் மே 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ். அல்லி வெளியிட்டுள்ளார்.
விடுமுறை காலத்திலும் அவசர வழக்குகள் பாதிக்கப்படாமல் இருக்க, ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் “விடுமுறை கால அமர்வுகள்” (Vacation Benches) அமைக்கப்பட்டுள்ளன. இவ்வமர்வுகளில் விசாரணைக்கு வரும் வழக்குகளுக்கான மனுக்களை, வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் எஸ். சவுந்தர், எல். விக்டோரியா கவுரி, பி.பி. பாலாஜி, பி. தனபால், என். செந்தில்குமார், ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமிநாராயணன், ஆர். சக்திவேல், முகமது சபீக் ஆகியோர் விடுமுறை கால அமர்வுகளில் அவசர வழக்குகளை விசாரிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மதுரை அமர்வில் நீதிபதிகள் பி. வேல்முருகன், எஸ். ஸ்ரீமதி, சி. குமரப்பன், ஜி.கே. இளந்திரையன், கே.கே. ராமகிருஷ்ணன், கே. ராஜசேகர், டி. பரத சக்கரவர்த்தி, ஆர். விஜயகுமார், ஆர். பூர்ணிமா, ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, கே. முரளி சங்கர், பி. வடமலை ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீதித்துறை நடவடிக்கைகள் இடையூறு இன்றி நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள், அவசர தேவைகளுக்கேற்ப மனுக்களை குறிப்பிட்ட நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
