சென்னை, கோயம்பேடு பகுதியில் இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனமும், கவலையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு பகுதியில் இத்தகைய துணிகரமான குற்றம் அரங்கேறியிருப்பது தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கின் நிலையை உலுக்கும் விதமாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு பகுதியில் நேற்று இளம்பெண் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த வன்முறை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
கொடூரக் கொலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது இதுவரை காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை மக்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும்.
பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கண்காணிப்புக் கேமராக்களின் (CCTV) எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதோடு, காவல்துறை ரோந்துப் பணிகளைப் பலமடங்கு தீவிரப்படுத்த வேண்டியது அவசியம்.
மக்களின் உயிருக்கும், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பிற்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் இத்தகைய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்குத் தமிழக அரசு கடுமையான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
கோயம்பேடு கொலைச் சம்பவம் சென்னை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவரின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
