Close Menu
    What's Hot

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»டெல்லியின் ஆதிக்கத்தையும்; அடிமை கூட்டத்தையும் தமிழகம் அனுமதிக்காது!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
    தமிழ்நாடு

    டெல்லியின் ஆதிக்கத்தையும்; அடிமை கூட்டத்தையும் தமிழகம் அனுமதிக்காது!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    Editor web3By Editor web3March 20, 2026No Comments6 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் களத்தை சந்திப்பதற்கே டெல்லியின் அனுமதி அவர்களுக்கு (அதிமுக) வேண்டும் என்று ஸ்டாலின் சாடியுள்ளார். தமிழக மக்கள் ஒருபோதும் டெல்லியின் ஆதிக்கத்தையும் அதன் அடிமை கூட்டத்தையும் அனுமதிக்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான உ.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நம் உயிருடன் கலந்திருக்கும் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

    திராவிட மாடல் 2.0 ஆட்சியை உறுதி செய்திடும் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் நம்மை அழைக்கிறது. ஜனநாயக அறப்போர்க் களத்திற்குக் கொள்கை வீரர்களாகக் கழகத்தினர் அணிவகுக்கும் நேரம் இது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை உங்களில் ஒருவனான நான், உங்களின் குரலாக எடுத்துச் சொன்னேன்.

    வெற்றி நிச்சயம். அதற்கான இலக்கை அடைவதற்கு எவ்வித சமரசமுமின்றி இயக்கத்திற்காக உழைப்பது ஒன்றே இலட்சியம். அந்த உறுதியுடன்தான் திராவிட முன்னேற்றக் கழகம் தனது தோழமைக் கட்சிகள் அடங்கிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியுடன் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தைச் சந்திக்கிறது. திராவிட மாடல் 2.0 அரசு அமைந்தே தீரும்.

    உங்களில் ஒருவனான என் மனதில் அந்த உறுதி இருக்கிறது. அதற்குக் காரணம், எத்தகைய எதிர்ப்புகளையும் சூழ்ச்சிகளையும் முறியடித்திடும் ஆற்றல் பெற்ற கழக உடன்பிறப்புகளான நீங்கள் உறுதுணையாக இருந்து உழைப்பதுதான். அதனால்தான் உங்களின் முகம் காணும்போது நான் உற்சாகமடைகிறேன்; ஊக்கம் கொள்கிறேன்; உத்வேகம் பெறுகிறேன்.

    மார்ச் 17-ஆம் நாள் முதல், அண்ணா அறிவாலயத்தில், கழகத்தின் சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறேன். உங்களில் ஒருவனான என் முகம் காண நேர்காணலில் நீங்கள் எந்தளவு ஆர்வம் காட்டுகிறீர்களோ, அதைவிடக் கூடுதல் ஆர்வத்துடன் உடன்பிறப்புகளான உங்களின் முகம் காண நான் விரும்புவதால்தான், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோருடன் ஒவ்வொரு நாளும் பல மணிநேர அளவில் நேர்காணல் நடைபெறுகிறது.

    முதல்நாள் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கழக உடன்பிறப்புகளிடம் நேர்காணல் நடத்தினேன். தமிழ்நாட்டிற்கு முன்பாகவே புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், அவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. புதுச்சேரி கழக நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் புத்துணர்ச்சியையும் பெரும் நம்பிக்கையையும் காண முடிந்தது. இரண்டாவது நாள் (மார்ச் 18) தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களைச் சேர்ந்த விருப்பமனு அளித்த ஏறத்தாழ 2,000 உடன்பிறப்புகளை நேருக்கு நேர் காண்கின்ற வாய்ப்பு அமைந்தது.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை ஆகியவற்றை உள்ளடக்கிய கழக மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை ஒவ்வொரு தொகுதிவாரியாக 9 மணி நேரத்திற்கும் மேலாகச் சந்தித்து நேர்காணலை நடத்தினேன். இடையில் சற்று நேரம் உணவு இடைவேளை என்றாலும், அந்த நேரத்திலும் தேர்தல் தொடர்பான பணிகளே நீடித்தன. மாலையில் மீண்டும் நேர்காணல் தொடர்ந்தது. 51 தொகுதிகளுக்கான நேர்காணல் நிறைவு பெற்ற இரவு 10 மணி வரை அண்ணா அறிவாலயத்தில் திரண்டிருந்த உடன்பிறப்புகளின் ஆர்வமும், அவர்களிடம் காணப்பட்ட எழுச்சியும் என் களைப்பை விரட்டி, உற்சாகத்தை அளித்தது.

    மூன்றாவது நாளான (மார்ச் 19) நேற்று, தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களிலிருந்து விருப்பமனு தாக்கல் செய்தவர்களை நேர்காணல் செய்தேன். கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகியவற்றை உள்ளடக்கிய கழக மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் 52 தொகுதிகளுக்கான நேர்காணலை காலை தொடங்கி இரவு வரை நடத்தி முடித்தேன்.

    இவ்வளவு நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறீர்களே என்று அக்கறை கொண்டு, நான் சற்று ஓய்வெடுக்கலாமே என்று உடன் அமர்ந்திருந்த கழகத் தலைமை நிர்வாகிகளும், விருப்பமனு அளித்தவர்களும் தெரிவித்தார்கள். ஓய்வைவிட உழைப்புதான் உற்சாகத்துடன் தொடர்ந்து இயங்கச் செய்கிறது. நேர்காணலில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் உங்களில் ஒருவனான என்னை எப்படி உற்று நோக்கினார்களோ, அதுபோலவே விருப்பமனு அளித்து நேர்காணலுக்கு வந்த ஒவ்வொரு உடன்பிறப்பையும் உள்ளன்புடன் நானும் கவனித்தேன்.

    உடன்பிறப்புகளின் முகம் பார்த்தே அவர்களின் மன ஓட்டத்தை அறியும் உணர்வை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார். நேர்காணலுக்காக அறிவாலயத்திற்கு வந்த உடன்பிறப்புகளைப் பார்த்தபோது, அவர்களுடைய தொகுதிகளைச் சார்ந்த, அறிவாலயம் பக்கமே வந்திராத கழகத்தின் ஆணிவேரான தொண்டர்களின் முகங்களும் என் மனதில் தோன்றின. தலைவர் முதல் தொண்டர் வரை அத்தனை பேரிடமும் ஒரே உணர்வு கொண்ட இயக்கம்தானே நம் திராவிட முன்னேற்றக் கழகம்!

    ஒவ்வொரு தொகுதிவாரியாக நேர்காணல் செய்தபோது, ஒவ்வொருவரும் ஐந்தாண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளால் மக்கள் பெற்றுள்ள பலன்கள்தான், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்குக் காரணமாக இருக்கப்போகின்றன என்பதைச் சொல்லத் தவறவில்லை. ஒருவர், மகளிர் உரிமைத் தொகை பற்றி சொன்னால், இன்னொருவர் விடியல் பயணம் பற்றி விளக்கினார். மற்றொருவர், புதுமைப்பெண் என்றதும், உடனே, ‘நான் முதல்வன்’ திட்டத்தால் தங்கள் ஊரில் பயன் பெற்றவர்களைப் பற்றி அடுத்தவர் சொல்கிறார். தமிழ்ப்புதல்வன், காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, தாயுமானவர் திட்டம், கலைஞர் கனவு இல்லம் எனச் சாதனைகளால் நிறைந்த 5 ஆண்டுகால ஆட்சியைப் பற்றி ஒவ்வொருவரும் குறிப்பிட்டு, கழக ஆட்சிதான் தொடரும் என்ற உறுதியையும் வழங்கினார்கள்.

    சொன்னதைச் செய்யும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறது. கடந்த 2021 தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி, கூடுதலான புதிய திட்டங்களையும் செயல்படுத்தி, மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் நிறைவாக நடைபெற்ற ‘கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்வில் ‘தமிழ்நாடு 2030’ என்கிற தொலைநோக்குப் பார்வையிலான 14 அம்சங்கள் கொண்ட திட்டத்தையும் உங்களில் ஒருவனான நான் அண்மையில் வெளியிட்டிருந்தேன்.

    1. வீட்டு வசதித்துறையின் சார்பில் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் சேர்த்து 7 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.

    2. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேவைப்படும் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு.

    3. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும்.

    4. பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், லைப்ரரி 5.0, வெற்றிப்பள்ளிகள் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள்.

    5. உயர்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் 2.0 திட்டம் உள்ளிட்ட திட்டங்கள்.

    6. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பொருளாதார முன்னேற்றம்.

    7. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒவ்வொருவருக்கும் வீட்டுமனைப் பட்டா.

    8. ஊரக வளர்ச்சித் துறை சார்பில் உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம்.

    9. தொழில்துறை சார்பில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.

    10. கால்நடை – பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் பால் உற்பத்தி உயர்வு – மீனவர்கள் வாழ்வு மேம்பாடு.

    11. நகராட்சி நிருவாகத் துறை சார்பில் உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்.

    12. சிறு – குறு – நடுத்தரத் தொழில் துறை சார்பில், 5 சிறப்புத் தொழில் குழுமங்கள் அமைக்கப்படும்.

    13. நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாதுகாப்பான நவீன சாலை தொழில்நுட்பம்.

    14. கைத்தறி மற்றும் ஜவுளித்துறை சார்பில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சிறப்பான திட்டங்கள் என அந்த நிகழ்வில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன்.

    தமிழ்நாடு-2030 எனும் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையிலும், அதனை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நிறைவேற்றுகின்ற வகையிலும், கூடுதல் அம்சங்களுடன் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை வெகு விரைவில் வெளியாக இருக்கிறது. எந்தத் தேர்தல் களமாக இருந்தாலும் மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய தேர்தல் அறிக்கை என்றால் அது நமது கழகத்தின் தேர்தல் அறிக்கைதான்.

    2021 முதல் 2026 வரையிலான 5 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த மாநிலமும் செய்ய முடியாத சாதனைத் திட்டங்களையும், இந்தியாவின் பல மாநிலங்கள் பின்பற்றக்கூடிய முதன்மையான திட்டங்களையும் நிறைவேற்றியுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைகளையும், அதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கிடைத்துள்ள பயன்களையும், அவர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் இடைவிடாது பரப்புரை செய்யும் பணியை உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.

    கழகத் தகவல் தொழில்நுட்ப அணியினர் ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளங்களில் கழக அரசின் சாதனைகளைப் பதிவிட்டு, அனைத்துத் தரப்பு மக்களிடமும் அதனைக் கொண்டு சேர்க்க வேண்டும். மாவட்டக் கழக நிர்வாகிகள் தொடங்கி பல்வேறு சார்பு அணிகளைச் சார்ந்த கழக நிர்வாகிகளும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்) தளம் என அவரவர் சமூக வலைத்தளக் கணக்குகளில் கழகத்தின் சாதனைகளைப் பதிவிட்டுப் பரப்பிட வேண்டும்.

    கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியைச் சிறப்பாக நடத்தினோம். ஆனால், அது நமக்கு எளிதானதாக இல்லை. தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசின் தமிழர் விரோத – பழிவாங்கும் போக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு, மாநில உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்ந்தபடியே, ஜனநாயகம் காக்கும் அறப்போர்க்களத்தில் நின்றபடியேதான் எண்ணிக்கையில் அடங்காத சாதனைத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். அதனால்தான், 2026 தேர்தல் களத்தைத் தமிழ்நாடு அணிக்கும் டெல்லி அணிக்குமான தேர்தல் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

    தமிழ்நாடு VS டெல்லி என்பதை முன்வைத்துதான் இந்தத் தேர்தல் களம் என்று நாம் சொல்வதை நிரூபிப்பது போலவே, டெல்லியில் இருந்துதான் எல்லாம் முடிவு செய்யப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரும் அவரது சகாக்களும் டெல்லியில் இருப்பது எதற்காக? தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் நிதியை வாங்கித் தருவதற்காகவா? தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படாமல் முடக்கப்பட்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்காகவா? மாநில உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகவா? சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகவா? இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை. தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் அடுப்பு எரிந்தால் என்ன, எரியாவிட்டால் எங்களுக்கென்ன என்ற மனநிலையுடன்தான் எதிர்க்கட்சியினர் தங்களது கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறனர்.

    தேர்தல் களத்தைச் சந்திப்பதற்கே டெல்லியின் சம்மதம் வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களின் கைகளில் தமிழ்நாடு சிக்கிக்கொண்டால் ஒவ்வொரு நாளும் என்ன பாடுபட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்துள்ள தமிழ் மக்கள் ஒருபோதும் டெல்லியின் ஆதிக்கத்தையும், அதன் அடிமைக் கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள். தங்கள் சுயநலனுக்காகச் சொந்தக் கட்சியை அடமானம் வைத்ததுபோல, தமிழ்நாட்டையும் டெல்லியிடம் அடகு வைக்கத் தயங்காதவர்கள் அவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள். இனி எதிர்க்கட்சியினர் எடுக்கும் முடிவு என்பது டெல்லி எடுக்கும் முடிவுதான் என்பதையும் மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதற்கும், தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்குமான வலிமை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே உண்டு என்பதே மக்களின் உறுதியான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை உருவாக்கியது திராவிட மாடல் ஆட்சி. அதனால் நாம் மக்களிடம் செல்வோம். களத்தில் நின்று வெற்றியைப் பெறுவோம்.

    பேரறிஞர் பெருந்தகை அண்ணா நம்மை விட்டு மறைந்தபோது, தி.மு.கழகத்தையும் ஆட்சியையும் கருணாநிதி தன் தோளில் சுமந்து, 1971-ஆம் ஆண்டு தேர்தலில் மகத்தான வெற்றியுடன் தொடர்ந்து ஆட்சியில் அமரச் செய்தார். அதுபோல நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நம்மிடையே இல்லாவிட்டாலும் அவருடைய கொள்கைப் பாதையில் திராவிட மாடல் அரசு தொடர்ந்து அமைந்திட, 2026 தேர்தல் களத்தில் நிச்சயம் வெல்வோம் என உறுதிகொள்கிறேன், உடன்பிறப்புகளே உங்களின் அயராத உழைப்பின் மீதுள்ள நம்பிக்கையால்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை அதிரடி உயர்வு!. சவரன் ரூ.400 உயர்வு!. வெள்ளி விலை சரிவு!
    Next Article ஏவுகணை திறன் காலி; ஈரான் முற்றிலும் முடக்கம்!. போர் விரைவில் முடிவுக்கு வரும்!. நெதன்யாகு!
    Editor web3
    • Website

    Related Posts

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    March 21, 2026

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    March 21, 2026

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    March 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு..! குக்கர் சின்னம் மட்டுமே என திட்டவட்டம்..!

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு இவ்வளவா? வேட்பு மனுவில் உள்ள விவரங்கள்..!

    Trending Posts

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    March 21, 2026

    இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்த எச்சரிக்கை உங்களுக்கு..!

    March 21, 2026

    தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? தேர்தல் அதிகாரி ஆலோசனை…!

    March 21, 2026

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    March 21, 2026

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    March 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.