மழைக்கால கூட்டத்தொடருக்கான சட்டப்பேரவையில் இன்று முக்கிய மசோதாக்கல் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மறைந்த கேரள முதலமைச்சர் பிஎஸ் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன், நாகாலாந்து முன்னாள் ஆளுநர் இல. கணேசன் இறந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று நடைபெறும் 2வது நாள் கூட்டத்தில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் பல்கலைக்கழக சட்ட மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் சடப்பேரவையில் இன்று தாக்கலாக வாய்ப்புள்ளது. இதேநேரம் கரூர் விவகாரத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.