2026 தேர்தலில் திமுக மற்றும் தவெக கூட்டணி இடையேதான் போட்டி இருக்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:
விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு பழனிசாமி தலைமையிலான கூட்டணி நிச்சயம் 3-ம் இடத்துக்குச் செல்லும். 2026 தேர்தலில் திமுக மற்றும் தவெக கூட்டணி இடையே தான் போட்டி இருக்கும்.
பல கட்சிகள் கூட்டணிக்காக கடந்த 3 மாதங்களாக என்னை அணுகினார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. முடிவெடுக்க டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் வரை ஆகும். இதற்கிடையில், சில புதிய மாற்றங்கள் வரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அமமுக இடம் பெறும் கூட்டணி தான் உறுதியாக வெற்றி பெறும்.
எங்கள் கட்சியின் நிர்வாக கட்டமைப்பை தமிழகம் முழுவதும் பலப்படுத்தி இருக்கிறோம். 2019, 2021 தேர்தல்களை விட இந்த முறை வலுவாக இருப்போம். அதனால் எங்களை தவிர்த்து விட்டு எந்தக் கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது.
என்னை யார் தடுத்தாலும் துரோகத்தை வீழ்த்தாமல் ஓயமாட்டேன். பழனிசாமி அதிமுகவை குடும்ப கட்சியாக நடத்துவதாக செங்கோட்டையன் சொல்வது உண்மைதான். அவரது மகனும், மருமகனும் எல்லோரையும் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். எங்களது வேட்பாளர்களை கூட அணுகி அதிமுகவுக்கு அழைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
