தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு குழுவினர் அவரைத் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது, அதிமுக சட்டமன்றக் குழு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தனர்.

அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக  எஸ்.பி. வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் சட்டமன்றக் கொறடாவாக  சி. விஜயபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சபாநாயகரிடம் சி.வி. சண்முகம் தரப்பு தெரிவித்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதத்தையும் அவர்கள் தற்காலிக சபாநாயகரிடம் நேற்று நேரில் வழங்கினர்.

நேற்று தற்காலிக சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட கடிதத்தைத் தொடர்ந்து, இன்றும் முறைப்படி சபாநாயகரைச் சந்தித்த சி.வி. சண்முகம் தரப்பினர், தங்களுக்கு 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். பெரும்பான்மையான உறுப்பினர்கள் எஸ்.பி. வேலுமணி பக்கமே இருப்பதால், அவரையே சட்டமன்றக் குழுத் தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது அதிமுகவில் நிலவும் உட்கட்சி அரசியல் சூழலில், சி.வி. சண்முகம் தரப்பு முன்வைத்துள்ள இந்தப் பட்டியலை ஏற்று, யாருக்கு அதிகாரப்பூர்வமாக எதிர்க்கட்சி வரிசையில் உரிய அந்தஸ்து வழங்கப்படும் என்பதைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பரிசீலித்து முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version