வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
”தமிழ்நாடு வளர்கிறது” என்ற பயணத்தின் கீழ் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ம் தேதி சென்னையில் இருந்து ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு அவர், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.
மேலும் அவர் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, ஜெர்மனியை சேர்ந்த நிறுவனங்களுடன் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு ரூ.7 ஆயிரத்து 20 கோடி முதலீடுகளை ஈர்த்தார். பின்னர் ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 2-ம் தேதி இங்கிலாந்து சென்றார். லண்டனில் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, 7 நிறுவனங்களுடன் ரூ.8,496கோடி முதலீடுகளை ஈர்த்தார்.
முதலமைச்சரின் ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் போது மொத்தம் ரூ.15,516கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 17,613 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு திரும்பினார்.
காலை 8.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்த அவரை, அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் பலர் உற்சாகமாக வரவேற்றனர்.