பட்டிமன்ற பேச்சாளரும், நடிகருமான ராஜா மீது சாதிய பாகுபாடு குற்றச்சாட்டு எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பிப்ரவரி 3ம் தேதி அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் தமிழ் சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் கலந்து கொண்டனர். அங்கு அவர்களுக்கு தமிழ் உணவு தயாரித்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அவர்களுக்கு விதவிதமான தமிழ் உணவுகள் பரிமாறப்பட்டன. அப்போது, உணவு வழங்க வந்த தமிழர்களிடம் சாதி குறித்து ராஜா கேட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்த்திகேயன் ஃபஸ்துரு என்பவர், தனது சகோதரி மற்றும் அவரின் தோழிகளுக்கு தமிழ் சங்கத்தின் சார்பில் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோருக்கு உணவு தயாரித்து வழங்கும் பொறுப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். உணவு பரிமாறும் போது, தனது தங்கை மற்றும் அவரின் தோழிகளிடம் அவர்களின் ஊர் பெயர் மற்றும் சாதி குறித்து ராஜா விரிவாக கேட்டதாக கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். தனது தங்கை காரைக்குடி என்றதும், செட்டியாரா என்று ராஜா கேட்டதாகவும், அதற்கு பதிளிக்காமல் இருந்தவுடன், “வேறு என்ன ஆளு நீங்க” என்று ராஜா மீண்டும் கேட்டதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் தனது தங்கை மிகவும் மனவருத்தம் அடைந்ததாக கார்த்திகேயன் ஃபஸ்துரு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சாதிகளை மறந்து தமிழர்களாய் இணைந்து, ஒரு சங்கம் வைத்து அங்கு பேச அழைத்தால், அங்கும் வந்து சாதி வன்மத்தை தான் காட்டுவீர்களா என்று ராஜா மீது கடும் விமர்சனத்தை அவர் முன்வைத்துள்ளார்.
இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்து வீடியோ ஒன்றை ராஜா வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு உணவு பரிமாறியவர்களிடம் சாதி குறித்து தான் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக அவர் விளக்கி உள்ளார்.
http://
I’ve met Pattimandram Raja in person when he visited my city in 2008. I was one of the speakers in the pattimandram where he was a naduvar. Also met him online in 2021 for one of my speeches. He was always friendly, rational, and focused on ideas. I never saw him ask anyone about… pic.twitter.com/Fm5BG2FTBd
— Kalpana Suren (@kalpana_suren) February 10, 2026
பிப்ரவரி 3ம் தேதி நடந்த நிகழ்வு பற்றி, நீண்ட நாட்கள் கழித்து பிப்ரவரி 9ம் தேதி சமூக வலைதளங்களில் தவறான கருத்துகள் பரப்பப்பட்டதாக ராஜா தெரிவித்துள்ளார். தவறாக நடந்து கொண்டிருந்தால், அப்போதே அந்த சகோதரிகள் தன்னிடத்தில் கேட்டு இருக்கலாம் என்றும் இல்லை என்றால் பட்டிமன்றம் முடிந்த பிறகாவது அவர்கள் கேட்டு இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேடி வந்து உணவு தருபவர்களின் அன்புக்கு, அவர்களிடம் சாதியை பற்றி விசாரிப்பேனா? என்று ராஜா கூறியுள்ளார். எந்த காலத்திலும் தான் அப்படி இருந்ததில்லை என்றும் அப்படி இருக்கப் போவதுமில்லை என்றும் ராஜா விளக்கமளித்துள்ளார்.
