பழைய ஓய்வூதியம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை புதிய அறிவிப்பை வெளியியிடுகிறார் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளனர். தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, அரசு துறைகளில் காலியாக உள்ள பணிஇடங்களை நிரப்புவது, ஊதியக்குழு முரண்பாடுகளை களைவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இதனிடையே, கடந்த 22 ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து 2ஆம் கட்டமாக இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு முன்னிலையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது 23 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்னை நாளை தீர்க்கப்படும் என்று அமைச்சர்கள் கூறியுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதலமைச்சர் அறிவித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டம் நடத்தி ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்போம் என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

