தேனி மாவட்டம் கம்பம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் முபாரக் அலி (68).நாட்டு வைத்தியரான இவரது மகன் முகமது இர்ஃபான் (27).எம்.ஏ.பட்டதாரியான இவர் போலீஸ் வேலைக்கு செல்வதற்காக தீவிரப் பயிற்சி எடுத்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது அந்த வீட்டின் அருகே முஹம்மது தாஹா என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் மாடிக்கு சென்று பார்த்துக் கொண்டிருந்த போது,
அந்த வீட்டு மாடி வழியாக தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் இருந்து முகமது இர்ஃபானின் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் முகமது இர்ஃபானை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேற்று மாலை முகம்மது இர்ஃபானின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முபாரக் அலி மகனைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே அதிர்ச்சியில் திடீரென உயிரிழந்தார்.இந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முகமது இர்ஃபானும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
முபாரக் அலிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்த நிலையில் இதில் நான்கு குழந்தைகள் உடல் நலக்குறைவால் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், ஐந்தாவதாக பிறந்த முகமது இர்ஃபானை மிகவும் பாசத்தை கொட்டியும் பாதுகாப்பாகவும் வளர்த்து வந்தனர். அவரை பட்டப்படிப்பு படிக்க வைத்த நிலையில், போலீஸ் அதிகாரியாக்க அனைத்து ஏற்பாடுகளையும் முபாரக்அலி செய்து வந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் மகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில்,மகனின் நிலை கண்டு தந்தையும் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது …