தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 12 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருவதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், உணவகங்கள், ஜவுளி நிறுவனங்கள், ஆட்டோமொபைல், கட்டுமானம் மற்றும் உற்பத்தி தொழில்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை காட்டிலும் வட மாநில தொழிலாளர்களே அதிகம்.
குறைந்த ஊதியத்தில் கூடுதல் நேர உழைப்பை கொடுப்பதில், வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களை காட்டிலும் அர்வம் காட்டுவதால், உரிமையாளர்களும் வடமாநிலத்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தொழிலாளர் நலத்துறையின் கணக்குப்படி, மொத்தம் 11லட்சத்து 93ஆயிரத்து 297 பேர் தமிழ்நாட்டில் பல இடங்களில் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒடிசாவில் இருந்து 2,86,500 பேர், பீகாரில் இருந்து 2,47016 பேர், ஜார்கண்ட்டில் இருந்து 1,90,518 பேர், மேற்கு வங்கத்தில் இருந்து 1,84,960 பேர், அசாமில் இருந்து 92,105 பேர், உத்தரபிரதேசம்- 89,462, சத்தீஷ்கார்- 24,882, மத்தியபிரதேசம்- 14,440, ஆந்திரா- 13,036, கேரளா- 11,043, ராஜஸ்தான்- 6,414,
கர்நாடகா- 6,010, மராட்டியம்- 4,935,
திரிபுரா- 3,806, அருணாசலப்பிரதேசம்- 2,073, பஞ்சாப்- 1,946, டெல்லி- 1,896,
உத்தரகாண்ட்- 1,803, மேகாலயா- 1,636
குஜராத்- 1,290, மணிப்பூர்- 1,128, நாகாலாந்து- 1,016 பேர் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.
அதேப்போல், சண்டிகர், தெலங்கானா, அரியானா, இமாச்சலப்பிரதேசம், புதுச்சேரி, மிசோரம் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 500 முதல் 1,000-க்குட்பட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்களும், ஜம்மு காஷ்மீர், சிக்கிம், அந்தமான் நிகோபர் தீவு, கோவா, டாமன் டையூ, லடாக், லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 20 முதல் 500-க்குட்பட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்களும் தமிழ்நாட்டில் தங்கி பணிபுரிகிறார்கள்.