இந்த மாத தொடக்கத்தில் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா வேகமெடுப்பதாக வெளியான தகவல் உலகம் முழுவதும் மீண்டும் கலக்கத்தை உண்டாக்கியது. ஆசிய நாடுகளிலும் அவ்வகை கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இந்த வகை கொரோனாவால் உயிருக்கு பாதிப்பு எதுவும் இல்லை என கூறி வந்த நிலையில், கர்நாடகாவில் உடல்நல பாதிப்பால் உயிரிழந்த 85 வயது முதியவருக்கு கொரோனா இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதனால் மக்களிடம் ஒருவிதமான அச்சம் பரவத் தொடங்கியது. மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து விடுமோ?, ஊரடங்கு போடப்படுமோ?, ஆக்சிஜனுக்காக காத்துக்கிடக்க நேரிடுமோ? உயிர் போய்விடுமோ? என்ற பயத்தால், சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் உலா வந்தன. இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ”பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்” வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”புதிய வகை கொரோனா தொற்று எதுவும் இல்லை எனவும் ஒமைக்கரன் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 10-15 நபர்கள் நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். எல்லா தொற்றும் வீரியமற்ற தொற்றாக தான் இருக்கிறது. இதனால் யாரும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படவில்லை. எந்தவித மரணமும் இல்லை”.
”லேசான அறிகுறிகளுடன் மட்டுமே தான் இருக்கிறார்கள், ஆகையால் எந்த பயமும் தேவையில்லை. புதிய வகை தொற்று வருகிறதா? என்பது குறித்தும் தொடர்ந்து கண்காணிப்பில் தான் இருக்கிறோம்.
மாதம் 26 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டதில் புதிய வகை தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை. ஒமைக்கரன் வகை தொற்று தான் கண்டறியப்பட்டு இருக்கிறது”.
”கொரோனா தொற்று குறித்து தேவையில்லாத அச்சம் வேண்டாம். தொடர் கண்காணிப்பில் இருக்கிறோம். கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டவர்கள் இணை நோயுடன் இருந்தால் மருத்துவரை அணுகலாம்” என விளக்கமளித்துள்ளார். இவரது இந்த விளக்கம் மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.