திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ஒத்தி வைத்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று (டிச. 18) 5வது நாளாக நடந்தது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை நடைபெற்று நிறைவடைந்தது. இதனையடுத்து, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ஒத்தி வைத்துள்ளது.
இதனிடையே தனி நீதிபதி விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட இது தொடர்பான அனைத்து வழக்குகளும் ஜனவரி 7ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எழுத்துப்பூர்வமான வாதங்களை நாளை (டிச. 19) தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
