தை மாதத்திற்குள் கூட்டணி குறித்து அறிவிப்பேன் என ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில் இம்மாதம் முடிய இன்னும் 3 நாட்களே இருக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தின் அடுத்த அரசியல் முடிவு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில், “தை மாதம் முடிய இன்னும் 3 நாட்கள் இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், தோல்வியடைந்த அதிமுகவிற்குள் எதிர்க்கட்சித் தலைவர் யார் எனும் கேள்வி எழுந்தது. அந்தப் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து உருவான உள்கட்சிப் பிரச்சினைகளால் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓபிஎஸ் தேர்தலில் போட்டியிடுவது குறித்து உறுதியான முடிவை எடுக்காததும், கூட்டணி குறித்து உரிய பேச்சுவார்த்தைகளை நடத்தாத நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறி அதிமுக மற்றும் திமுகவில் இணையத் தொடங்கினர்.
இதற்கிடையில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று ஓபிஎஸ் நம்பிக்கையுடன் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இணைந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “நான் அதிமுகவில் இணையத் தயார். டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக்கொள்ளத் தயாரா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால், அதிமுகவிற்கும் டிடிவி தினகரனுக்கும் கருத்து வேறுபாடு இல்லை, வாக்குகள் சிதறாமல் இருப்பதற்கு கூட்டணி அமைக்கின்றோம். ஆனால் ஓபிஎஸ், சசிகலா குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்” என்றார். மேலும், “அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்றார்.
ஆனால், தை மாதத்திற்குள் கூட்டணி குறித்து அறிவிப்பேன் என ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில் இம்மாதம் முடிய இன்னும் 3 நாட்களே இருக்கிறது. ஆனால் அவரது தரப்பில் இதுவரை கூட்டணிக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.இதற்கு முக்கிய காரணம், ஓபிஎஸ் தனித்து விடப்படவில்லை. எங்களுடன் தான் இருக்கிறார் என்று அண்ணாமலை கூறியதுதானாம். எப்படியாவது என் டி ஏ கூட்டணியில் இணைந்துவிட வேண்டும் என்பதற்காக அவர் அமைதி காப்பதாக கூறப்படுகிறது,
