திருப்பூரில் பள்ளியில் போதிய வகுப்பறை இன்றி வராண்டா, மொட்டைமாடியில் மாணவர்கள் கல்வி பயின்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜகவினர் பள்ளி முன்பு சாலை மறியல் மேற்கொண்டனர். அப்போது போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1238 மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் 18 வகுப்பறைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது, மற்ற வகுப்பு மாணவர்கள் வராண்டா மொட்டை மாடி நடை பாதை உள்ளிட்ட இடங்களில் அமர்ந்து கல்வி பயின்று வரும் நிலை உள்ளது.
இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியான நிலையில் பெற்றோர்களிடம் கருத்து கேட்டு கூட்டம் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நியாயம் கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் அறிவித்திருந்தனர் இதனை தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.
இதனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் பள்ளி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக போலீசார் வலியுறுத்தியதால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.