தமிழக அரசின் பட்ஜெட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் கைக்கணினி (டேப்லெட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக முதல்கட்டமாக நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் கோரியிருந்தது.
இதன்படி 8 ஜிபி ரேம் (டிடிஆர்-4), 256 ஜிபி ஹார்டு டிஸ்க் (எஸ்எஸ்டி), 14 அல்லது 15.6 இன்ச் திரை, ஐ3 இன்டெல் அல்லது ஏஎம்டி பிராசசர், புளூடூத் 5.0, விண்டோஸ் 11 ஓஎஸ், 720பி ஹெச்டி கேமரா, ஒரு வருட உத்தரவாதம் உள்ளிட்ட அம்சங்களுடன் ‘தமிழக அரசு மடிக்கணினி’ என்ற வாசகமும் இதில் இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டெண்டர் வரும் ஜூலை 9ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், டெண்டருக்கான முந்தைய கூட்டத்தில் டெல், ஏசர், லெனோவா, எச்பி உள்ளிட்ட நிறுவனங்களின் பிரநிதிகள் கலந்து கொண்டுள்ளன. இதில் இந்த நிறுவனங்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகளுக்கு எல்காட் நிறுவனம் பதில் அளித்துள்ளது.
மேலும் டெண்டரை சமர்பிக்க கால அவகாசம் வேண்டும் என்று ஒரு நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் ஏற்கனவே போதிய கால அவகாசம் கொடுத்து விட்ட காரணத்தால் இனிமேல் கால அவகாசம் அளிக்க முடியாது என்று எல்காட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, திட்டமிட்டபடி வரும் ஜுலை 9ம் தேதி டெண்டர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.