கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க அனுமதித்து கடந்த அக்டோபர் 13-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் இன்று (டிச.2) பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘கரூர் சம்பவ வழக்கில் அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை மற்றும் சிறப்புப் புலனாய்வு குழுவின் விசாரணைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று நடந்த இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக அரசின் விரிவான விளக்கத்தை கேட்காமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், சட்டம் – ஒழுங்கு மாநில அரசின்கீழ் வருவதால், இச்சம்பவம் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கும் உரிமை மாநில அரசுக்கு தான் உண்டு என்றும் வாதிடப்பட்டது.

முன்னதாக, சிபிஐ விசாரணை குறித்து ஆய்வு மேற்கொள்ள டிஐஜி அதுல்குமார் நேற்று (டிச.1) காலை கரூருக்கு வருகை புரிந்தார். அவர் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, சிபிஐ விசாரணையை கண்காணிக்க, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு நேற்றிரவு கரூருக்கு வருகை புரிந்தது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்களும், பொதுமக்களும் மனு அளிக்க விரும்பினால் தற்காலிக சிபிஐ அலுவலகத்திற்கு வந்து இன்று (டிச.2) காலை முதல் மனு அளிக்கலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சிபிஐ விசாரணையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூர் வேலுசாமிப்புரத்தில் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த முதலில் தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இதனிடையே சிறப்புப் புலனாய்வு குழுவின் விசாரணைக்கு தடை கோரியும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அக்.13ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, தற்போது கரூரில் தற்காலிக அலுவலகம் அமைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அவர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அத்துடன் போலீசார், அந்த பகுதி மக்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தோர், தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டவர்களின் சிபிஐ அதிகாரிகள் இதுவரை விசாரணை நடத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version