தூய்மை பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, துாய்மை பணியாளர்களுக்கு, 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் மத்திய அரசு, நமஸ்தே திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமி நாதன் மற்றும் லட்சுமி நாராயாணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் இந்த திட்டத்தில் 213 தகுதியான பட்டியலின சமூகத்தை சேர்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், எந்த ஆதரங்களும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை கொண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கூடாது எனவும் வாதிடப்பட்டது.
அப்போது, இந்த திட்டத்தால் உண்மையாக பட்டியலின மற்றும் பழங்குடியினர் பயனடைய வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த திட்டத்தால் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் உறவினர் வீரமணி இயக்குனராக உள்ள தலித் வர்த்தக மற்றும் தொழில் சபை மற்றும் ஜென் கிரீன் லாஜிஸ்டிக்ஸ் அமைப்புகளே அதிக லாபம் அடைவதாக குறிப்பிட்டனர். அதே நேரத்தில் இந்த திட்டத்தை கொண்டு வந்ததற்கு தமிழக அரசுக்கு பாராட்டும் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த திட்டத்தில் ஒப்பந்தம் செய்துள்ள 213 தூய்மை பணியாயாளர்களையும் பங்குதாரர்களாக சேர்க்கப்படுவார்கள் என ஜென் கிரீன் லாஜிஸ்டிக்ஸ் அமைப்பு தெரிவித்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் கடந்த மாதம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தை சிபிஐக்கு மாற்ற மறுப்பு தெரிவித்தனர். மேலும், 213 தூய்மைப் பணியாளர்களையும் பங்குதாரர்களாக சேர்க்க
தலித் வர்த்தக மற்றும் தொழில் சபைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.