தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சீரடி அதிவேக விரைவு ரயிலில் வேலூர் காட்பாடிக்கு பயணம் மேற்கொண்டார்.
முதலமைச்சரின் வருகையை ஒட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டிடம் முதல் ரயில் நிலையம் வரை ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தளபதி வாழ்க என கோஷங்கள் எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும், திமுக கொடிகளை அசைத்தும் தொண்டர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
முதலமைச்சரை வழியனுப்ப அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர். மக்களவை உறுப்பினர் ஜெகத் ரட்சகன் உள்ளிட்டோர் முதலமைச்சருடன் காட்பாடி வரை ரயிலில் பயணிக்கின்றனர். ரயில் புறப்படும் முன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் இருந்து வெளியே வந்து தொண்டர்களை நோக்கி கை அசைத்தார்.
நிகழ்ச்சி நிரல்:
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
வேலூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, கங்கநல்லூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயத்தையும், கலைஞரின் திருவுருவச் சிலையையும் திறந்து வைக்க உள்ளார்.
அணைக்கட்டிலிருந்து சாலை மார்க்கமாக திருப்பத்தூர் செல்லும் முதலமைச்சர், நாளை (ஜூன் 26) திருப்பத்தூரில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
சென்னை திரும்புதல்:
கள ஆய்வை முடித்துக்கொண்டு, நாளை மதியம் 12.18 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு, மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிய உள்ளார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.