அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான 15வது புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று சென்னை, பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை பணிமனையில் தொடங்கியது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.சிவசங்கரன் தலைமையில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு சலுகைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பங்கேற்பு:
இந்தப் பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி ஐஏஎஸ், மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமை இயக்குநர் பிரபு சங்கர், நிதித்துறை தணிக்கை இயக்குனர் அருண் சுந்தர் தயாளன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட 87 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், திமுக, அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 85 தொழிற்சங்கங்கள் இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளன. இரண்டு தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கவில்லை.
ஊதிய ஒப்பந்த சிக்கல்:
அரசுப் போக்குவரத்து கழகத் தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கும் மேலாகியும், 15வது புதிய ஊதிய ஒப்பந்தம் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. போன்ற மத்திய தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 87 சங்கங்கள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.