திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் இனி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்திருக்கோவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் நிலையில் இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
அவ்வாறு வரும் பக்தர்கள், அன்று சாமியை தரிசனம் செய்ய முடியாத பட்சத்தில் மறுநாள் முருகனை தரிசிப்பதற்காக கோயில் கடற்கரை பகுதியில் இரவு நேரத்தில் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் சமீப காலமாக கடற்கரை பகுதியில் தங்குபவர்களிடம் திருட்டு போன்ற குற்றச் சம்பவம் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன. அந்த புகார்களை கருத்தில் கொண்டு பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் நேற்று இரவு முதல் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இனி கடற்கரை பகுதிகளில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை யாரும் தங்க அனுமதி இல்லை என பக்தர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.
பின், கடற்கரை பகுதியில் இருந்த அனைவரையும் திருக்கோயில் பணியாளர்கள், காவல்துறையினர், கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் சேர்ந்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனால், பக்தர்கள் கோயில் வளாகங்கள் மற்றும் அங்குள்ள மண்டபங்களில் தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் இரவு 10 மணிக்கு மேல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையானது ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
