சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமார் இல்லத்திற்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
நகைகள் காணாமல் போனதாக தொடரப்பட்ட புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீசார் அடித்ததில் உயிரிழந்தார். ஒட்டுமொத்த மாநிலத்தையும் பரபரப்பாக்கிய இச்சம்பவத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய், இன்று சிவகங்கை மடப்புரத்தில் உள்ள உயிரிழந்த அஜித் வீட்டிற்கு நேரில் சென்றார் அங்கு அஜித்குமாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அஜித்குமாரின் தாயார் மாலதியிடம் ஆறுதல் கூறினார். அதேபோன்று அஜித்குமாரின் தம்பி நவீன்குமாரிடம் ஆறுதல் கூறிய அவர், 2 லட்ச ரூபாய் ரொக்கப்பணத்தை நிதியுதவியாக வழங்கினார்.
தேவைப்படும் உதவிகளை தவெக நிர்வாகிகள் செய்வார்கள் என்று நம்பிக்கை தரும் சொற்களை அக்குடும்பத்தினருக்கு விஜய் வழங்கினார். விஜயின் வருகையையொட்டி அந்த இடத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.