தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதிவாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை நேரில் அழைத்து நடிகரும், தவெக தலைவருமான விஜய் பரிசு வழங்கி பாராட்டி வருகிறார்.
முதல்கட்டமாக கடந்த 30-ந் தேதியும், கடந்த 4-ந் தேதி இரண்டாம் கட்டமாகவும், மூன்றாவது கட்டமாக நேற்றும் இந்த விழா நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை அழைத்து பரிசு வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டு மதிய உணவு விருந்தளித்து பாராட்டினார். இதன் நான்காம் கட்ட விருது விழா, நாளை (15/6/25) அன்று மாமல்லபுரத்தில் ஷெரட்டன் ஓட்டலில் நடைபெற உள்ளது.
இதில் சேலம், திருவண்ணாமலை, சென்னை, மதுரை, தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 39 சட்டமன்ற தொகுதிகளில் படித்து முதலிடம் பிடித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். இதுவே இந்த ஆண்டுக்கான நான்காவது மற்றும் கடைசி கட்ட விருது விழா என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்கள் முன்னிலையில் பிள்ளைகள் கௌரவிக்கப்படும் நிகழ்வு உண்மையிலேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மூன்றாவது ஆண்டாக விஜய் இவ்வாறு மாணவர்களை அழைத்து பாராட்டி வருகிறார். கட்சியைத் தாண்டி பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விஜய் சென்று சேர்ந்துள்ளதற்கு இச்செயலும் ஒரு காரணமாகும்.