அதிமுக களத்தில் இல்லை என பேசிய விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான செல்லூர் ராஜூ, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஏளனமாக பார்த்த அவர், “தவெகவுக்கு கடையை விரித்து வைத்துவிட்டு வியாபாரம் ஆகாமல் போகப் போகிறது. பரப்புரைக்கு நயன்தாரா வந்தால்கூட கூட்டம் கூடும். நடிகருக்கு கூடுதலாக ரசிகர்கள் இருக்கலாம்.
எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது” என்று கூறி ரசிகர் கூட்டத்தை மட்டும் வைத்து அரசியல் வெற்றி பெற முடியாது என்று சுட்டிக்காட்டினார்.“அதிமுக களத்திலேயே இல்லை எனச் சொல்ல எவ்வளவு தைரியம்? நாவடக்கம் தேவை” என்று விஜய்யின் கருத்துக்கு கடும் பதிலடி கொடுத்த செல்லூர் ராஜூ, “நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்தார்.
விஜய்யின் ரசிகர் பலத்தை ஒப்புக்கொண்ட போதிலும், அது அரசியல் வெற்றிக்கு போதாது என்று அவர் வலியுறுத்தினார். எம்ஜிஆர் போன்ற தலைவர்களின் அரசியல் பயணத்துடன் ஒப்பிட்டு விஜய்யை கிண்டலடித்தார்.தற்போதைய அரசின் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த செல்லூர் ராஜூ, “2026-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனதும், தவறு செய்யும் அதிகாரிகள் ஐஏஎஸ் ஆக இருந்தாலும் சரி, எந்த அதிகாரிகளாக இருந்தாலும் சரி சிறைச்சாலை செல்வது உறுதி” என்று கூறினார். திமுக ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாக மறைமுகமாக விமர்சித்த அவர், அதிமுக ஆட்சி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
